இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,249 கோடி நிதி உதவி
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதிக்காக இலங்கை காத்திருக்கிறது.
கொழும்பு,
2022-ல் இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டது, அதன் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வீழ்ச்சியடைந்தது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 4,690 கோடி அமெரிக்க டாலர்களாகும். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதிக்காக இலங்கை காத்திருக்கிறது. நாளை மறுதினம் (13-ந்தேதி) நிதி மந்திரி விக்கிரமசிங்கே இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் நிதி மற்றும் நிறுவனத் துறைகளை வலுப்படுத்த 15 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1,249 கோடி) உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக இலங்கை நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குனர் பேரிஸ் ஹடாட்-ஜெர்வோஸ் கூறும் போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நிதித்துறைக்கு ஆதரவளிக்க வலுவான பாதுகாப்பு வலைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. டெபாசிட், இன்சூரன்ஸ் திட்டத்தை வலுப்படுத்துவது, பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் சேமிப்பைப் பாதுகாக்க உதவும் என கூறினார்.