கோவாவில் படகு சவாரி செய்த ரிஷி சுனாக்கின் மனைவி, மகள்கள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மனைவி மற்றும் மகள்கள் கோவாவில் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்தனர்.
பனாஜி,
இங்கிலாந்தில் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பிரபல இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தி. இந்த தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் கிருஷ்ணா என 2 மகள்கள் உள்ளனர்.
தெற்கு கோவாவில் பெனாவ்லிம் கடற்கரை பகுதி உள்ளது. தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த சுற்றுலா தலத்திற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கின் மனைவி அக்சதா மூர்த்தி, அவரது இரு மகள்கள் மற்றும் அவரது தாயார் சுதா மூர்த்தி ஆகியோர் விடுமுறை நாளை கழிக்க சென்றுள்ளனர்.
இதுபற்றி பீலே என பலரால் அழைக்கப்படும் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் என்ற மீனவர் கூறும்போது, இங்கிலாந்து பிரதமரின் மனைவியை பார்த்ததும் உடனே அவரை அடையாளம் கண்டுகொண்டேன்.
அவர் என்னை அணுகி, இந்த பிரபல சுற்றுலா பகுதியில் நீர் விளையாட்டு பாதுகாப்பான ஒன்றா? என என்னிடம் விவரங்களை கேட்டார். அதற்கு நான், மேடம், அது 100 சதவீதம் பாதுகாப்பானது.
நீங்கள் நீர் விளையாட்டை விளையாட விரும்பினால் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் பாதுகாப்பேன் என கூறியுள்ளார். அவர்களின் உரையாடலை சிலர் வீடியோவாக எடுத்து உள்ளனர்.
அவர்கள் எங்களது விரைவு படகுகளில் ஏறும் முன், இங்கிலாந்தில் நிறைய கோவாவாசிகள் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா? என பார்த்து கொள்ளும்படி கேட்டு கொண்டேன். அதற்கு அவர் ஆகட்டும் என கூறினார்.
இந்த சந்திப்பு தனக்கு ஏற்பட்ட ஓர் இனிமையான அனுபவம் என பீலே கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் அவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு உலக நடைமுறையை அறிந்தவர்களாக இருந்தனர் என கூறியுள்ளார்.