அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் இந்திய வம்சாவளி மனைவி யார்? வெளியான ருசிகர தகவல்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில் ஜேம்ஸ் டேவிட் வென்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக ஒஹியோ மாகாண எம்.பி. ஜேம்ஸ் டேவிட் வென்சி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அதிபர் வேட்பாளர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக களமிறங்கும் ஜேம்ஸ் டேவிட் வென்சியின் மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஜேம்ஸ் டேவிட் வென்சியின் மனைவி உஷா சிலுக்குரி. இந்து மதத்தை சேர்ந்த உஷா சிலுக்குரி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.
உஷாவின் தந்தை ஆந்திராவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். கலிபோர்னியாவின் சாண்டியாகோவில் பிறந்த உஷா கனடிக் மாகாணத்தில் உள்ள யாலி சட்டக்கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு ஜேம்ஸ் டேவிட் வென்சியை உஷா சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் பட்டப்படிப்பை முடித்தபின் இருவரும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். முதலில் கிறிஸ்தவ முறைப்படியும், பின்னர் இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு இவென், விவேக் என இரு மகன்களும், மிரபெல் என்ற மகளும் உள்ளனர். 2016 மற்றும் 2022ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒஹியோ தொகுதியில் குடியரசு கட்சி சார்பில் ஜேம்ஸ் டேவிட் வென்சி போட்டியிட்ட நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது உஷாவும் பங்கேற்று தனது கணவருக்கு ஆதரவு திரட்டியுள்ளார். தொடக்கத்தில் டிரம்ப் எதிர்ப்பாளராக இருந்த ஜேம்ஸ் டேவிட் வென்சி பின்னர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக மாறினார். தற்போது இந்திய வம்சாவளி உஷா சிலுக்குரியின் கணவரான ஜேம்ஸ் டேவிட் வென்சி குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளது அமெரிக்க - இந்திய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.