உலகம் முழுவதும் திடீரென முடங்கிய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்


உலகம் முழுவதும் திடீரென முடங்கிய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்
x
தினத்தந்தி 4 April 2024 7:04 AM IST (Updated: 4 April 2024 7:09 AM IST)
t-max-icont-min-icon

சில மணிநேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பின.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கின.

நேற்று இரவு 11.45 மணியளவில் இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். செயலியில், உள்நுழைய முயற்சிக்கும்போது, தற்போது சேவை கிடைக்கவில்லை என்று காட்டியது. இந்த நிலையில் வாட்ஸ் அப் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் புகாரளித்துள்ளனர்.

இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்களும், இங்கிலாந்தில் சுமார் 46,000 பயனர்களும், பிரேசிலில் 42,000-க்கும் மேற்பட்ட பயனர்களும் புகாரளித்துள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராம் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 4,800 பேர் புகாரளித்துள்ளனர். இந்த நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் மீண்டும் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பின.

மெட்டாவுக்குச் சொந்தமான செயலிகள் முடங்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக செயலிழந்தது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.


Next Story