'சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம்' - அமெரிக்கா திட்டவட்டம்


சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம் - அமெரிக்கா திட்டவட்டம்
x

சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம் என அமெரிக்க ராணுவம் கூறியது.

அதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. கடலில் விழுந்த ராட்சத பலூனின் சிதைவுகளை மீட்பதற்காக இரண்டு போர் கப்பல்கள் அனுப்பப்பட்டன.

சீனாவின் பலூன் சுடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு எதிராக கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி உள்ளது. அது மக்களின் பயன்பாட்டுக்கான விண் ஓடம் என்று சீனா தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று அமெரிக்கா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறியதாவது:-

"கடல் மேற்பரப்பில் விழுந்த ராட்சத பலூனின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் சென்ற பலூன் சிதைவுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. கடலில் இருந்து மீட்கப்படும் பலூனின் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டமோ அல்லது எண்ணமோ எதுவும் இல்லை.

பலூனை சுட்டு வீழ்த்துதற்கு முன்பு பலூனை பற்றிய போதுமான முக்கிய தகவல்களை சேகரித்தோம். அந்த தகவலை பகுப்பாய்வு செய்து வருகிறோம். பலூன் பாகங்கள் மீட்கப்பட்ட பிறகு மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story