பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை
பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை வெடித்தது.
பாரீஸ்,
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது.
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளன. அதேவேளையில் உலகின் பல நாடுகளில் இருக்கும் பாலஸ்தீன மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் யூத விரோதம் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதித்துள்ளன. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசு விதித்துள்ள தடையை மீறி நேற்று முன்தினம் இரவு தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணியாக சென்றனர். அதேபோல் லில்லி, போர்டியாக்ஸ் மற்றும் பிற நகரங்களிலும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் நடைபெற்றன. தடையை மீறி நடைபெற்றதால் பேரணிகளை நிறுத்திய போலீசார் மக்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் போலீசார் ஏற்படுத்தி இருந்த தடுப்புகளை மீறி முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியது.
அதனை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பாரீஸ் உள்பட பல இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது.
இதில் போராட்டக்காரர்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையேயான மோதலால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் போர்க்களம் போல காட்சியளித்தன. வன்முறையில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே பேரணிகளுக்கு பிரான்ஸ் அரசு விதித்துள்ள தடையானது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் போராட்டம் குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்நாட்டில் பிளவை ஏற்படுத்த வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "சர்வதேச பிளவுகளுடன் தேசிய பிளவுகளை சேர்க்க வேண்டாம். பிரான்ஸ் மக்களை ஒற்றுமையாக இருக்க வலியுறுத்துகிறேன்.
ஹமாஸ் இஸ்ரேல் மக்களின் மரணத்தை விரும்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு ஆகும். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பிரான்ஸ் குடிமக்கள் 13 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.