காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்
காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
வாஷிங்டன்,
இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130க்கும் மேற்பட்டோர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனை மீது போர் அறிவித்துள்ள இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் இந்த தாக்குதலில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் நடைபெற்றுவரும் போரால் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐ.நா. மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் தேவை அதிகரிப்பு காரணமாக காசாவில் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எகிப்து, இஸ்ரேல் எல்லைகள் வழியாக காசாவுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், பணய கைதிகளை விடுவிக்காதவரை நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் காசாவுக்கு விமானம் மூலம் எகிப்து நிவாரண பொருட்களை வழங்கியது. எகிப்து விமானப்படை விமானங்கள் காசாவில் உள்ள கடலில் நிவாரண பொருட்களை வீசி சென்றன.
இந்நிலையில், காசாவுக்கு விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கூடிய விரைவில் நிவாரண பொருட்கள் வீசப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.