ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: உகாண்டாவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதா உகாண்டா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கம்பாலா,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்
இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும்.