அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்


அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்
x

பயணிகளுக்கு இடையூறு மற்றும் அசவுகரியம் ஏற்பட்டதற்கு வருந்துவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபுதாபி,

அபுதாபியில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் நேரடி விமான சேவை இருந்து வருகிறது. இதில் அந்த நிறுவனத்தின் விமானம் இன்று அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்டது. மேலே பறந்து கொண்ட சில நிமிடங்களில் அந்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுதாரித்துகொண்ட விமானிகள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர்.

அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இண்டிகோ விமானத்தை மஸ்கட்டில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து விமானம் பத்திரமாக அங்கு தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், பயணிகளுக்கு இடையூறு மற்றும் அசவுகரியம் ஏற்பட்டதற்கு வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் மஸ்கட்டில் தேவையான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் வானில் பறக்க அனுமதிக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story