துருக்கி நிலநடுக்கம்: 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி..!


துருக்கி நிலநடுக்கம்: 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி..!
x

நிலநடுக்க பாதிப்பால் இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 42 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டமாஸ்கஸ்,

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி ரிக்டர் 7.8 என்ற அளவில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 42 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 36,187 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியின் கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் 248 மணி நேரத்துக்குப் பிறகு இன்று உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அக்டோகன் தெரிவித்தார்.

மேலும், இந்த கட்டடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களில் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருடன் ஒருவரை பார்க்கும் போது நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அக்டோகன் தெரிவித்தார்.


Next Story