ஜனநாயகத்திற்காக தோட்டாவை எதிர்கொண்டேன் - டொனால்டு டிரம்ப்


ஜனநாயகத்திற்காக தோட்டாவை எதிர்கொண்டேன் - டொனால்டு டிரம்ப்
x

ஜனநாயகத்திற்காக தோட்டாவை எதிர்கொண்டேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டிரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. அதேவேளை, இந்த தாக்குதலில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை பாதுகாப்புப்படை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். பின்னர், காதில் காயம் ஏற்பட்ட டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அதை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த டிரம்ப், அச்சம்பவத்திற்கு பின் முதல் முறையாக மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றார்.

இந்த பிரசார கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கூறியதாவது, நான் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவன் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் நான் கேட்கிறேன், ஜனநாயகத்திற்கு நான் என்ன செய்தேன்? கடந்த வாரம் ஜனநாயகத்திற்காக நான் தோட்டாவை எதிர்கொண்டேன். ஜனநாயகத்திற்கு எதிராக நான் என்ன செய்தேன்? முட்டாள்தனமான கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story