அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வயது முதிர்ந்த வேட்பாளரானார் டிரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் வயது முதிர்ந்த வேட்பாளரானார் டிரம்ப்
x

78 வயது கொண்ட டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் பைடன் களம் இறங்கினார்.

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த பைடன், அதற்கான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவுத்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

இந்த தேர்தலில், பைடனின் வயது முதிர்வு அவருக்கு எதிராக திரும்புவதற்கான காரணிகளில் ஒன்றாக அமைந்தது. அதிபர் தேர்தலுக்கான விவாதத்தின்போது, அவர் டிரம்புடன் பேசும்போது சற்று திணறினார். அடுத்தடுத்த கூட்டங்களில் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையானது. அவருடைய தவறுகள் சுட்டி காட்டப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றால், அடுத்த 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட கூடும் என்றும் கட்சியினரால் பார்க்கப்பட்டது. இந்த சூழலில் 81 வயதுடைய பைடன் போட்டியில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார்.

இதனால், அவருக்கு அடுத்து அதிக வயது கொண்ட அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக டொனால்டு டிரம்ப் பார்க்கப்படுகிறார். பைடன் போட்டியில் இருந்து வாபஸ் பெற்ற நிலையில், 78 வயது கொண்ட டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் வயது முதிர்ந்த வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இதுவும் தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு சாதகம் ஏற்படுத்தும் என அக்கட்சி பார்க்கிறது. கமலா ஹாரிசும் தீவிர தேர்தல் பணியை தொடங்கி விட்டார். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதும், கட்சிக்குள் ஆதரவை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் பணியாற்றுவதில் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.


Next Story