பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி
பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர்.
கைபர் பக்துன்குவா,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர்.
கடந்த மாதம் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், லோயர் குர்ராம் மாவட்டத்தில் நிலத்தகராறு ஒன்றில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 7 பேர் பலியானார்கள். இதனையடுத்து, இரு குழுவினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், குர்ரம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் காயமடைந்தனர். இவர்கள் கடந்த காலங்களில், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.