உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் முன்னணியில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.
2020 இல் தலிபான்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்ததில் இருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை, முறையே 23 மற்றும் 24 வது இடத்தில் இருந்து வருகின்றன. கோஸ்டாரிகா மற்றும் குவைத் 12 மற்றும் 13ல் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தன.
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் முன்னணியில் இல்லை என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முதல் 10 நாடுகளில் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது.
முதல் 20 நாடுகளில், கனடா மற்றும் இங்கிலாந்து மட்டுமே 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 2006-10 முதல் மகிழ்ச்சியாக மக்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஆப்கானிஸ்தான், லெபனான் மற்றும் ஜோர்டான் போன்றவை சரிந்துள்ளன என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் மகிழ்ச்சி ஆராய்ச்சியாளரான ஜெனிபர் டி பாவ்லா, இயற்கையுடன் நெருங்கிய தொடர்பு மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை அவர்களின் வாழ்க்கை திருப்திக்கு முக்கிய பங்களிப்பாகும் என்று கூறியுள்ளார்.
வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், 2006-10ல் இருந்து 30 வயதிற்குட்பட்ட குழுக்களிடையே மகிழ்ச்சி வியத்தகு அளவில் குறைந்துள்ளது. தற்போது இளைஞர்களை விட பழைய தலைமுறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இதற்கு மாறாக, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில், அதே காலகட்டத்தில் எல்லா வயதினரிடமும் மகிழ்ச்சி கணிசமாக அதிகரித்தது. ஐரோப்பாவைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்திலும் மகிழ்ச்சி சமத்துவமின்மை அதிகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.