''வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்''- ஐ.நா எச்சரிக்கை..!!
வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க்,
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.
புவி வெப்பமடைதலின் விளைவுகளை நினைவூட்டும் வகையில், வட அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆசியா வரை சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் தீவிர வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
"வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளுக்கு உலகம் தயாராக வேண்டும். வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர்'' என்று அவர் கூறி உள்ளார்.
மேலும் அவர் 'வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் .
'சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எல் நினோ விளைவு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வெப்ப மயமாதல், காலநிலை முறை, அதிக வெப்ப நிகழ்வுகள் மற்றும் வெப்ப தீவிரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.1980களில் இருந்து வடக்கு அரைக்கோளத்தில் ஒரே நேரத்தில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
"இந்த வெப்ப அதிகரிப்பு குறைவதற்கான அறிகுறி தெரியவில்லை. வெப்ப அலைகளினால் மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படும் கடுமையான தாக்கங்கள்" பற்றி எச்சரித்துள்ளார்.
குறிப்பாக ,' உலகின் அதிவேகமாக வெப்பமடையும் கண்டங்களான ஐரோப்பா, இத்தாலியின் சிசிலி மற்றும் சர்டினியா தீவுகளில் வெப்பம் 48 டிகிரி செல்சியஸ் (118 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருக்கும் என்ற முன்னறிவிப்புகளுக்கு மத்தியில் தற்போதைய வெப்ப அலையின் உச்சம் 2021-ல் சிசிலியில் பதிவான வெப்பநிலை 48.8 டிகிரி செல்சியசை முறியடித்துவிடும் போல் தெரிகிறது' என்று கூறி உள்ளார்.
'சமீப காலங்களில் அதிகபட்ச பகல் வெப்ப நிலையைக் காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது'.
''வளர்ந்து வரும் நகர மயமாக்கல், அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. வெப்ப அலைகளைத் தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும்'' என்று வெப்ப அலைகள் குறித்து அவர் கூறி உள்ளார்.
வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.