போராட்டம் தீவிரம்; இலங்கையில் சேவைகளை ரத்து செய்தது அமெரிக்க தூதரகம்
இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அமெரிக்க தூதரகம் இன்றும், நாளையும் தூதரக சேவைகளை ரத்து செய்துள்ளது.
கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். இந்நிலையில், கோத்தபாய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அமெரிக்க தூதரகம் இன்றும், நாளையும் தூதரக சேவைகளை ரத்து செய்துள்ளது. இதுபற்றி இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரக நடவடிக்கைகள் இன்று மதியம் மற்றும் நாளை ரத்து செய்யப்படுகிறது. இதனால் அசவுகரியம் எதுவும் ஏற்பட்டால் மன்னிக்க வேண்டுகிறோம். ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் மறுபடி திட்டமிடப்படும் என தெரிவித்து உள்ளது.
இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளார்.
பிரதமர் இல்லத்திற்கு வெளியேயும், போராட்டக்காரர்கள் குவிந்து உள்ளனர். அவர்கள் பிரதமர் இல்ல கட்டிட உச்சிக்கு சென்று தேசிய கொடியையும் ஏற்றினர். இதனை அடுத்து, பிரதமர் இல்லத்திற்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். பிரதமர் இல்லத்திற்கு சுற்றிலும் வான்வழி ரோந்தும் நடைபெற்று வருகிறது.