அழகால் வந்த ஆபத்து; பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க அமெரிக்கா, மெக்சிகோ வலியுறுத்தல்
பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வலியுறுத்தி உள்ளன.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் 24 மாகாணங்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த 2 மருத்துவ மையங்களில் அழகுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டன.
எனினும், அவர்களில் பலருக்கு கொடிய பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோயாளிகளில் 2 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களில் ஒருவர் உறுப்பு நன்கொடையும் வழங்கி உள்ளார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) உடனடியாக, தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
மெனிங்கிடிஸ் எனப்படும் ஒரு வகை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டவுடன், அது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய அளவுக்கு விரைவாக செயல்பட கூடியது என எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மெக்சிகோவின் நடப்பு ஆண்டு தொடக்கத்தில், இதேபோன்று, அறுவை சிகிச்சையுடன் தொடர்புடைய கொடிய நோய் பரவலுடன் இந்த பாதிப்பும் ஒத்து போகிறது என கூறப்படுகிறது. அப்போது, நோயாளிகளில் பாதி பேர் மெனிங்கிடிஸ் பாதிப்பால் உயிரிழந்து விட்டனர்.
இதனால், பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளும் உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தி உள்ளன.
அமெரிக்காவில் 195 பேர் இதுபோன்று அறுவை சிகிச்சை செய்து உள்ளனர். அவர்களை சி.டி.சி. மையம் கண்காணித்து வருகிறது. இவர்களை பற்றிய தகவலை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஆன் ஹாரிஸ் கூறியுள்ளார்.