தாய்லாந்து போர்க்கப்பல் விபத்து: 6 மாலுமிகள் பிணமாக மீட்பு


தாய்லாந்து போர்க்கப்பல் விபத்து: 6 மாலுமிகள் பிணமாக மீட்பு
x

கோப்புப்படம்

கப்பலுக்குள் கடல் நீர் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகளுடன் கப்பல் கடலுக்குள் மூழ்கியது.

பாங்காக்,

தாய்லாந்தின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் உள்ள பாங்சாபன் மாவட்டத்துக்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடலில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டின் போர்க்கப்பல் 'எச்டிஎம்எஸ் சுகோதாய்' புயலில் சிக்கியது. அதை தொடர்ந்து கப்பலுக்குள் கடல் நீர் புகுந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகளுடன் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர் உடனடியாக அங்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 75 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

31 மாலுமிகள் மாயமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்த நாட்டின் கடற்படை 30 மாலுமிகள் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

3 போர்க்கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மாயமான மாலுமிகளை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்தன.

இந்த நிலையில் விபத்து நடந்த 41 மணி நேரத்துக்கு பிறகு, அதாவது நேற்று முன்தினம் மதியம் ஒரு மாலுமி உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு தலையில் காயங்கள் இருந்ததாகவும், அதே சமயம் அவர் சுயநினைவில் இருநத்தாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே மாலுமி உயிருடன் மீட்கப்பட்ட இடத்தில் மேலும் சில மாலுமிகள் இருக்கலாம் என கருதிய மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அப்போது அங்கு 6 மாலுமிகள் பிணமாக மீட்கப்பட்டனர். காணாமல் போன 23 மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story