தாய்லாந்து: ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 6 பேர் மர்ம மரணம்
தாய்லாந்து நாட்டின் ஓட்டல் அறையில் பலியாகி கிடந்த வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் 37 முதல் 56 வயதுக்குள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள பிரபல கிராண்ட் ஹையாத் எராவன் ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் சிலர் வந்து தங்கியுள்ளனர். அவர்கள் வேறு வேறு அறைகளை வாடகைக்கு எடுத்து இருக்கின்றனர். இந்நிலையில், அவர்களில் 6 பேர் நேற்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.
இதில், அவர்களின் உடல்கள் ஓட்டலின் ஒரே அறையில் கிடந்துள்ளன. இது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது. அவர்களில் 2 பேரிடம் அமெரிக்க பாஸ்போர்ட் இருந்துள்ளது. அவர்களில் 3 பேர் பெண்கள். மற்ற 3 பேர் ஆண்கள் ஆவர். அவர்கள் மரணம் அடைவதற்கு முன் போராடியதற்கான எந்தவித அடையாளமும் இல்லை.
அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களுக்கு வழங்கிய உணவு அப்படியே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் 37 முதல் 56 வயதுக்குள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மர்ம மரண சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஓட்டலின் பணிப்பெண் முதலில் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி போலீஸ் அதிகாரி திடி சேங்சவாங் இன்று கூறும்போது, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. யாரோ அவர்கள் படுகொலை செய்துள்ளனர். அந்த நபர் யார் என தேடி வருகிறோம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சம்பவம் நடந்த ஓட்டலுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்ரத்தா தவிசின் நேரில் சென்று பார்வையிட்டார்.
அவருடன் மூத்த காவல் துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். சுற்றுலாவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஓட்டல் அறையில் பலியாகி கிடந்தவர்களில் சிலர் வியட்நாம் நாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் தவிசின் இன்று கூறும்போது, இந்த விசாரணையில் எப்.பி.ஐ. அதிகாரிகளும் இணைந்துள்ளனர். ஏனெனில் அவர்களில் 2 பேர் அமெரிக்க குடிமகன்கள் என கூறியுள்ளார்.