ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்; பலி எண்ணிக்கை 115- ஆக உயர்வு


தினத்தந்தி 23 March 2024 7:37 AM IST (Updated: 23 March 2024 3:50 PM IST)
t-max-icont-min-icon

ரஷியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில், அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

இதனால், உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 115- ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

60 பேர் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்றும் முதலில், கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story