உளவு பலூன் சர்ச்சைக்கு பிறகு அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு


உளவு பலூன் சர்ச்சைக்கு பிறகு அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு
x

கோப்புப்படம்

உளவு பலூன் சர்ச்சைக்கு பிறகு அமெரிக்க-சீன வெளியுறவு மந்திரிகள் நேரில் சந்தித்து பேசினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் மொன்டானா மாகாண வான்பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறப்பதை கண்டறிந்த அந்த நாட்டு ராணுவம் அது, உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என்று குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவோ வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் காற்றின் வேகத்தில் திசைமாறி அமெரிக்காவுக்குள் சென்றுவிட்டதாக கூறியது.

எனினும் அதை ஏற்க மறுத்த அமெரிக்க போர் விமானம் மூலம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. ஏற்கனவே இருநாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வரும் நிலையில் இந்த விவகாரம் இருநாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. உளவு பலூன் பிரச்சினைகளில் இருநாடுகளும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்ற அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வௌியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரும் மாநாட்டின் இடையே நேரில் சந்தித்து பேசினர். உளவு பலூன் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் காரசாரமாக விவாதித்தனர்.

உளவு பலூன் பிரச்சினையை குறிப்பிட்டு பேசிய ஆண்டனி பிளிங்கன் இது அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் பொறுப்பற்ற செயல் என கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷியாவுக்கு சீனா பொருள் உதவி வழங்கக்கூடாது எனவும், மீறி வழங்கும் பட்சத்தில் பொருளாதார தடைகள் உள்பட மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனாவை அவர் எச்சரித்தார். சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே விரும்புவதாகவும், மோதலையோ அல்லது பனிப்போரையோ அமெரிக்கா தேடவில்லை என்றும் ஆண்டனி பிளிங்கன் கூறினார்.


Next Story