ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஓவ்கடோக்,
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க ராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். இந்த ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 33 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த நாட்டின் ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
அதேபோல் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.