சர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் திட்டம் தாக்கல்- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
சர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் மறுசீரமைப்பு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
கொழும்பு,
பேச்சுவார்த்தை வெற்றி
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில், பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று பேசினார்.
அவர் பேசியதாவது:-
பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் பெற முயன்று வருகிறோம். சர்வதேச நிதியத்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது.
கடன் திட்டம்
இனிமேல், நாம் அளிக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை பொறுத்து, அடுத்தகட்ட நகர்வு இருக்கும். அடுத்த மாதம், சர்வதேச நிதியத்திடம் அத்திட்டத்தை சமர்ப்பிப்போம்.
அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இந்த நேரத்தில் நாடாளுமன்றம், குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியம்.
சர்வதேச நிதியத்துடன் இதற்கு முன்பும் நாம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். அப்போது, வளரும் நாடாக பேசினோம். இப்போது, திவால் நாடாக இருப்பதால், மிகவும் சிக்கலான சூழ்நிலையை சந்திக்க வேண்டி உள்ளது.
பணம் அச்சடிப்பு
இலங்கை பொருளாதாரம் சுருங்கி வருகிறது. அதை மாற்றி அமைக்க அரசு முயன்று வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்வதே நமது நோக்கம். சீரான அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை உயர்த்த முயன்று வருகிறோம். 2026-ம் ஆண்டுக்குள், 2018-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையை எட்டுவோம்.
அடுத்த ஆண்டு, நாம் சில சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். ரூபாய் மதிப்பை உயர்த்துவது முக்கியம். பணம் அச்சடிப்பதை குறைக்கும் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். 2023-ம் ஆண்டில், கட்டுப்பாடுகளுடன் பணம் அச்சடிக்கப்படும். 2024-ம் ஆண்டில், பணம் அச்சடிப்பது முற்றிலும் நிறுத்தப்படும்.
அதுபோல், பணவீக்க விகிதத்தை 2025-ம் ஆண்டுக்குள் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதத்துக்குள் குறைக்க திட்டமிட்டுள்ளோம். மின்சார வாரியம், சிலோன் பெட்ரோலியம் கழகம், இலங்கை ஏர்லைன்ஸ் ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிபர் வெளியேறினார்
ரணில் விக்ரமசிங்கே பேச்சுக்கிடையே எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பதாகைகளையும் பிடித்திருந்தனர். இதனால், சபை 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, அதிபர், சபையை விட்டு வெளியேறினார்.
இந்தியா உதவலாம்
இதற்கிடையே, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் கணேசன் விக்னராஜா கூறியதாவது:-
இலங்கைக்கு உதவலாமா என்பதில் சீனா குழப்பமாக உள்ளது. மற்ற நாடுகளும் குழப்பத்தில் உள்ளன. ஆனால், இலங்கையை சிக்கலில் இருந்து மீட்க இந்தியாவால் முடியும். அது இந்தியாவின் நலனுக்கு ஏற்றது.
இலங்கைக்கு உதவுவதன் மூலம் தனது வர்த்தக, முதலீட்டு உறவை இந்தியா தீவிரப்படுத்தலாம். அதே சமயத்தில், பொருளாதாரத்தை மீட்க அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கைக்கு 2 ஆயிரம் கோடி டாலர் முதல் 2 ஆயிரத்து 500 கோடி டாலர் வரை தேவைப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எரிபொருள் பதுக்கல்
இதற்கிடையே, எரிபொருள் தட்டுப்பாட்டால், இலங்கை தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுவதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் லியோனல் ஹெரத் கூறியுள்ளார்.
அதே சமயத்தில், இலங்கையில் ஏராளமானோர் பெட்ரோல், டீசலை பதுக்கி வருவதாகவும், அவர்களிடம் சோதனை நடத்தினால் ஒரு கப்பல் அளவுக்கு எரிபொருளை மீட்க முடியும் என்றும் 'தி ஐலண்ட்' பத்திரிகை தலையங்கம் எழுதி உள்ளது.