அதிகரிக்கும் கொரோனா: அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
முகக்கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
சிங்கப்பூர்,
சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன.
உலகையே உலுக்கிய கொரோனா பாதிப்பு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு நேர்மாறாக உள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் சுவாசம் தொடர்பான நோய்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்க கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த சூழலில் சிங்கப்பூர் மருத்துவமனைகள் நாட்டில் கொரோனா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய தொற்று அலைகளைத் தொடர்ந்து தேவைப்பட்டால் அவற்றின் திறனை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.