போஸ்னியாவில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு - 13 வயது சிறுவன் கைது
துப்பாக்கியால் சுடப்பட்டவர் ஆங்கில ஆசிரியராகவும், பள்ளியின் துணை முதல்வராகவும் பணிபுரிந்து வருகிறார்.
சராஜெவோ,
தென்கிழக்கு ஐரோப்பியாவின் பால்கன் தீபகற்பத்தில் போஸ்னியா நாடு அமைந்துள்ளது. இங்கு 1990-களில் ஏற்பட்ட மோசமான போருக்குப் பிறகு, தனிப்பட்ட முறையில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக போஸ்னியாவில் பல்வேறு துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்நிலையில் வடகிழக்கு போஸ்னியாவில் உள்ள லூகாவாக் நகரில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில், ஆசிரியர் மீது 13 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பள்ளியில் படித்து வந்த முன்னாள் மாணவரான சிறுவன், அண்மையில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளான்.
துப்பாக்கியால் சுடப்பட்டவர் அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், பள்ளியின் துணை முதல்வராகவும் பணிபுரிந்து வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனை கைது செய்து அவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பலத்த காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், "ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது. சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைத்து விசாரித்து வருகின்றனர்.