மனிதர்களுக்கு கடவுள் வழங்கிய அழகான விசயங்களில் ஒன்று "பாலியல் உறவு " - போப் பிரான்சிஸ் சர்ச்சை கருத்து
கடவுள், மனிதர்களுக்கு வழங்கிய அழகான விசயங்களில் ஒன்று பாலியல் உறவு என இளைஞர்களிடம் போப் பிரான்சிஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடிகன் சிட்டி,
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 20 வயது தொடக்கத்தில் உள்ள 10 பேருடன் போப் பிரான்சிஸ் (வயது 86) பங்கேற்ற கூட்டம் ஒன்று கடந்த ஆண்டு நடந்தது. இதில், கலந்து கொண்டவர்கள் போப்பிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர்.
அதில், பாலியல் உறவு, அது சார்ந்த நம்பிக்கைகள், கருக்கலைப்பு, ஆபாச பட துறை, எல்.ஜி.பி.டி. எனப்படும் தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகள் மற்றும் கத்தோலிக்க ஆலயத்தில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட விசயங்கள் பற்றி பேசப்பட்டன.
இந்த கூட்டத்தில் பேசப்பட்ட மற்றும் அதற்கு போப் பிரான்சிஸ் அளித்த பதில்கள் அடங்கிய விவரங்கள் ஆவண படம் போன்று தொகுக்கப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டது. அதில், பாலியல் உறவு பற்றி போப் பிரான்சிஸ் பேசும்போது, மனிதர்களுக்கு கடவுள் வழங்கிய அழகான விசயங்களில் ஒன்று பாலியல் உறவு என கூறியுள்ளார்.
எல்.ஜி.பி.டி. எனப்படும் தன்பாலின சேர்க்கையாளர்கள் பற்றி பேசிய அவர், கத்தோலிக்க ஆலயம் அந்த மக்களையும் வரவேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
அனைவரும் கடவுளின் குழந்தைகள். யாரையும் கடவுள் நிராகரிப்பதில்லை. கடவுள் தந்தையாக இருக்கிறார். அதனால், ஆலயத்தில் இருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், கருக்கலைப்பு பற்றி பேசும்போது, கர்ப்பம் கலைத்த பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், அந்த வழக்கம் ஏற்று கொள்ளப்படாத ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது என கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸின் பேச்சுகள் அடங்கிய விவரங்கள் வாடிகனில் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வ நாளிதழான லாசர்வேட்டர் ரொமேனோவில் வெளியிடப்பட்டு உள்ளது. இளைஞர்களுடனான அந்த உரையாடல்களை வெளிப்படையான மற்றும் உண்மையான முறையிலான பேச்சுவார்த்தை என விவரிக்கப்பட்டு உள்ளது.