அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இந்தியருக்கு உயர் பதவி: ஜோ பைடன் நியமனம்
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் ஆகும். இதன் கையகப்படுத்துதல், நிலைத்தன்மைக்கான துணை கீழ்நிலைச்செயலாளர் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இந்த பெண் அதிகாரி, இதுவரை கூகுளில் நம்பிக்கை, பாதுகாப்புக்கான ஆராய்ச்சி, நுண்ணறிவு இயக்குனர் பதவி வகித்து வந்தார். 'பேஸ்புக்' நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவின் உலகளாவிய தலைவராகவும், ராண்ட் கார்ப்பரேஷனில் மூத்த பொருளாதார நிபுணராகவும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த அதிகாரியாகவும், பதவி வகித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் மற்றும் எம்.எஸ். பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்களும், இந்திய வம்சாவளிகளும் உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது அவர்களின் அறிவாற்றலுக்கும், செயல் திறனுக்கும் சான்றாக அமைகிறது.