இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாசா
இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்
கொழும்பு,
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தில் நடக்கிறது. 19-ந்தேதி வேட்புமனு பெறப்படுகின்றன.
இந்த தேர்தலில் போட்டியிட தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா ,இலங்கை மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் மந்திரியுமான டல்லஸ் அழகப்பெருமா,. மற்றொரு எதிர்க்கட்சியும், நாட்டின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியுமான ஜெ.வி.பி. தலைவர் அனுர குமார திசநாயகேவும் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா விலகுவதாக அறிவித்துள்ளார்.நாட்டின் நன்மை ,மக்கள் நலனுக்காக அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.மேலும் தேர்தலில்முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவு தரவுள்ளதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.