பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் தொலைபேசியில் பேச்சு


பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் தொலைபேசியில் பேச்சு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 30 Jun 2023 7:06 PM IST (Updated: 30 Jun 2023 7:29 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

புதுடெல்லி,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவிய வாக்னர் அமைப்பு, உக்ரைனில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.

இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான இந்த கிளர்ச்சி படையினர் திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பி அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். இந்த வாக்னர் என்ற பெயரிலான அமைப்பு, ரஷியாவில் உள்ள சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அடைக்கப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தி ஒரு கூலிப்படையாக இயங்கி வருகிறது.

அந்த அமைப்பு தொடக்கத்தில் ரஷிய ஆதரவு படையாக செயல்பட்டு, உக்ரைனில் தாக்குதலை நடத்தியது. சமீபத்தில் அதன் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த கிளர்ச்சி நடவடிக்கைகளால், ரஷியாவில் உள்நாட்டு போர் ஏற்பட கூடிய சூழல் காணப்பட்டது. அதன்பின் சமரசம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன், வாக்னர் குழு பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story