போலந்தில் விழுந்த ரஷிய ஏவுகணை; 2 பேர் பலி - ஜோ பைடன் அவசர ஆலோசனை


போலந்தில் விழுந்த ரஷிய ஏவுகணை; 2 பேர் பலி - ஜோ பைடன் அவசர ஆலோசனை
x

கோப்புப்படம்

போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நேட்டோ தலைவர்களுடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வார்சா,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேட்டோ தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 9 மாதங்கள் ஆகியும் இந்த போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

உக்ரைன் மீதான போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்காத போதும் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதே வேளையில் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.

இதனால் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையே கடுமையான உரசல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்து வெடித்தது.

நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் கிழக்கு பகுதியில் உக்ரைன் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள பிரஸ்வோடோவ் என்கிற கிராமத்தில் ரஷிய ஏவுகணைகள் விழுந்ததாகவும், இதில் கிராம மக்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷியாவில் தயாரிக்கப்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லையில் தயார் நிலையில் ராணுவம்

எனினும் ஏவுகணையை வீசியது ரஷியாதான் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், இது தொடர்ந்து போலந்து நாட்டுக்கான ரஷிய தூதரகத்துக்கு போலந்து அரசு சம்மன் அனுப்பியுள்ளது. எனினும் இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா தெரிவித்துள்ளது.

ஏவுகணை தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள போலந்து அரசு எல்லையில் பாதுகாப்பு படைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

நேட்டோ கூட்டமைப்பின் கீழ் இருக்கும் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் 'நேட்டோ சட்டப்பிரிவு 5'ஐ பயன்படுத்தி தாக்குதல் நடத்திய அந்த நாட்டின் மீது நேட்டோ உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தலாம் என்கிற விதி உள்ளது.

ஜோ பைடன் அவசர ஆலோசனை

இந்த நிலையில் 'ஜி-20' மாநாட்டிற்காக இந்தோனேசியா சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தூக்கத்தில் இருந்து எழுப்பி போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்து 2 பேர் உயிரிழந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் 'ஜி-20' மாநாட்டிற்காக வந்திருந்த 'ஜி-7' மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களை நேரில் அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அவர்கள் போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்தது குறித்து தீவிரமாக விவாதித்தனர்.

அதை தொடர்ந்து ஆலேசானையில் பங்கேற்ற 'ஜி-7' மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டறிக்கையில், " ரஷிய ஏவுகணை விழுந்தது தொடர்பாக போலந்தில் நடந்து வரும் விசாரணைக்கு முழு ஆதரவையும், உதவியையும் வழங்குகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உறுப்புநாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். அதே வேளையில் உக்ரைனுக்கு தொடர்ந்து துணை நிற்போம்" என கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் வீசிய ஏவுகணையா?

இதனிடையே தனது தலைமையில் நடந்த அவசர ஆலோசனைக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தாக்குதல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துவதற்கான ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

அப்போது அவரிடம் போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷியாவில் இருந்து ஏவப்பட்டிருக்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோ பைடன், "இந்த ஏவுகணை ரஷியாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனினும் விசாரணை முடிவில் என்ன தெரியவருகிறது என்பதை பார்க்கலாம்" என கூறினார்.

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷிய ஏவுகணைகளை தாக்கி அழிக்க உக்ரைன் படைகளால் வீசப்பட்டதாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story