நபிகள் நாயகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை; இந்தியாவுக்கு வங்காளதேசம் பாராட்டு!
நபிகள் நாயகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த இந்தியாவுக்கு வங்காளதேசம் அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தாகா,
நபிகள் நாயகம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த இந்தியாவுக்கு வங்காளதேசம் அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்திற்கு வருகை தந்த இந்திய ஊடகவியலாளர்கள் குழுவுடன் அந்நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஹசன் மஹ்மூத், விரிவாக பேசினார். அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசுகையில் கூறியதாவது,
நபிகள் நாயகம் மீதான சர்ச்சை பேச்சு விவகாரம் மற்ற இஸ்லாமிய தேசங்களை போல அல்லாமல், இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பவில்லை.
ஆனால், நபிக்கு எதிரான கருத்துக்களில் வங்கதேச அரசு சமரசம் செய்து கொள்ளவில்லை.அதை ஒருபோதும் செய்யாது.
அதே வேளையில், நபிகள் நாயகத்திற்கு எதிரான எந்த ஒரு அறிக்கையும் கண்டிக்கப்பட வேண்டும். நபிகள் நாயகம் மீதான சர்ச்சை பேச்சு விவகாரத்தை வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கண்டிக்கவில்லை. ஏனெனில், இந்த விவகாரத்தை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக நாங்கள் கருதுகிறோம்.
உலகில் இது போன்று நடக்கும் போதெல்லாம் சில இஸ்லாமிய கட்சிகள் இங்கும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். வங்கதேசத்தில் சில மத வெறி குழுக்கள் உள்ளன. சில நேரங்களில் இந்த குழுக்களின் அறிக்கைகள் இந்தியாவில் உள்ள ஊடக கவனத்தை ஈர்க்கின்றன.
இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுத்த இந்திய அரசுக்கு வாழ்த்துக்கள். மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சமீபத்திய தனது உரை ஒன்றில், வங்கதேச அகதிகளை கரையான்கள் போல என்று குறிப்பிட்டார். இந்த சர்ச்சை கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "சில சமயங்களில் உள்நாட்டு அரசியல் காரணமாக வங்கதேசத்துக்கும், அதன் மக்களுக்கும் எதிராக இந்தியாவில் உள்ள தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் இங்கே தலைப்புச் செய்திகளாகின்றன.
இந்தியாவுடன் எங்களுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. இவ்வாறான பேச்சுக்கள் தொடர்பில் நாங்கள் எந்த விளக்கத்தையும் எதிர்பார்க்கவில்லை" என்று அவர் கூறினார்.