பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் திடீர் அறிவிப்பு
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
காசா,
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகளை மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. உறுதியாக தெரிவித்தார்.
அதே சமயம், இந்த போரில் காசா நகரம் முழுவதும் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். மேலும் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதோடு, லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இந்த போருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் ராணுவம் காசாவில் உள்ள ரபா உள்ளிட்ட நகரங்களில் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இதனிடையே காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நார்வே அரசாங்கம், வரும் 28-ந்தேதி பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் கூறுகையில், "பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அரபு அமைதி திட்டத்திற்கு நார்வே ஆதரவு அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
அதே போல் அயர்லாந்து அரசாங்கமும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், "இது அயர்லாந்து மற்றும் பாலஸ்தீனத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்" என்று தெரிவித்தார். மேலும் ஸ்பெயின் அரசு வரும் 28-ந்தேதி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கும் முடிவிற்கு ஆதரவாக இருந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பல்வேறு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்து பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு பலன் இருக்கிறது என்ற செய்தியை அயர்லாந்து மற்றும் நார்வே அரசுகள் இந்த உலகிற்கு சொல்ல வருகின்றன. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காசாவில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும். ஸ்பெயின் அரசாங்கமும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயின் நாட்டிற்கான இஸ்ரேலின் தூதரையும் திரும்ப பெறுவோம்" என்று தெரிவித்தார்.