'ரத்தன் டாடாவின் மறைவு உலகம் முழுவதும் உணரப்படும்' - பில் கேட்ஸ்


ரத்தன் டாடாவின் மறைவு உலகம் முழுவதும் உணரப்படும் - பில் கேட்ஸ்
x

ரத்தன் டாடாவின் மறைவு உலகம் முழுவதும் உணரப்படும் என தொழிலதிபர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் கடந்த 9-ந்தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவு உலகம் முழுவதும் உணரப்படும் என பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லிங்க்ட்-இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ரத்தன் டாடா ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்தார். வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அழியாத முத்திரையை ஏற்படுத்தியது. பல சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய நோக்கம் மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டேன்.

மக்கள் ஆரோக்கியமான, வளமான வாழ்க்கையை வாழ உதவும் பல முயற்சிகளில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அவரது இழப்பு இன்னும் பல ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் உணரப்படும். ஆனால் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியமும், அவர் அமைத்த முன்மாதிரியும் எதிர்வரும் தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்பதை நான் அறிவேன்."

இவ்வாறு பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.


Next Story