இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுள்ளார்.
கொழும்பு,
இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறி மாலத்தீவிற்கு தப்பி சென்றார். மாலத்தீவின் முன்னாள் அதிபரும், இந்நாள் சபாநாயகருமான முகமது நஷீத் உதவியால்தான், மாலத்தீவுக்கு கோத்தபய குடும்பம் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலத்தீவில் இருந்தவாறே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். அரசியல் சாசன பிரிவு 37 (1)-ன் கீழ் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.
இதன்படி இடைக்கால அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்தார். அத்துடன் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கு மாகாணத்தில் ஊரடங்குக்கும் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். அந்த அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், மாலத்தீவில் வாழும் இலங்கை மக்களும், மாலத்தீவு மக்களில் ஒரு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, மனைவி லோமா, பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகியோர் நேற்று மாலையில் சிங்கப்பூர் போய் சேர்ந்தனர்.
இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று விலகினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியானது.இதனையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை சபாநாயகர் மகிந்த யாப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுள்ளார். புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செயல் அதிபராக செயல்படுவார் என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்கள் வரும் 19 ஆம் தேதி பெறப்படும் என்றும்,அதற்கான வாக்கெடுப்பு 20 ஆம் தேதி நடத்தப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அறிவித்துள்ளார்.