அலெக்சி நவால்னி மரணத்திற்கு புதினே பொறுப்பு - ஜோபைடன்
ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்,
ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.
இதனையடுத்து கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணம் அடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2021-ல் டாம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றபோது விமானத்தில் பயணித்த அலெக்சி நவால்னி திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் ஜெர்மனியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு விஷம் வைக்கப்பட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ரஷிய அரசாங்கத்துக்கு தொடர்பு இருப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதாக ரஷிய அரசாங்கம் தெரிவித்தது. இந்தநிலையில்தான் அவர் மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நாவல்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்து வருகிறது. இதற்கு புதின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு ஜோபைடன் கூறினார்.