ஜப்பான் தொழில் துறையினருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
ஜப்பான் நாட்டு தொழில் துறையினருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
டோக்கியோ,
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கத்தோடு இந்த குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில், குவாட் நாடுகளின் 2 நாள் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
இந்நிலையில், குவாட் மாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் நாட்டு தொழில் துறையினரை இன்று சந்தித்தார். ஜப்பான் நாட்டின் 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் முதலீடு செய்ய வரும்படியும், இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படியும் ஜப்பான் தொழில் துறையினரிடம் இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.