சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு


சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூர்,

புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சாங்கி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்வது இது ஐந்தாவது முறையாகும். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் சிங்கப்பூர் செல்வது இதுவே முதல்முறை.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "சிங்கப்பூரில் தரையிறங்கி உள்ளேன். இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சந்திப்புகளை எதிர்நோக்குகிறோம். இந்தியாவின் சீர்திருத்தங்களும் நமது யுவ சக்தியின் திறமையும் நமது நாட்டை ஒரு சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுகிறது. நெருங்கிய கலாச்சார உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வருகை சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்றும் இரண்டு பிரதமர்களும் செமிகண்டக்டர் உற்பத்தி நிலையத்தை பார்வையிடுவார்கள் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செமிகண்டக்டர் துறையில் மனிதவள திறனை மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story