பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்... உன்னிப்பாக கவனிக்கும் நாடுகள்; ஆய்வு நிபுணர் தகவல்


பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்... உன்னிப்பாக கவனிக்கும் நாடுகள்; ஆய்வு நிபுணர் தகவல்
x

பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என ஆய்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

வாஷிங்டன் டி.சி.,

பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர் முறைப்படி வரவேற்கின்றனர். இதன்பின் அவர்கள் இருவரும் வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அமெரிக்கா முழுவதும் நியூயார்க் உள்பட 20 பெரிய நகரங்களில் இந்திய-அமெரிக்கர்கள் ஒன்று திரண்டு, அவரை வரவேற்கும் வகையில் ஒற்றுமை பேரணியை நடத்தினர்.

இதில், சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பேரணியாக சென்றனர். அப்போது சமூக மக்கள், இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கொடிகளை ஏந்தியபடியும், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட போஸ்டர்கள் மற்றும் சமூகம் சார்ந்த பேனர்களை ஏந்தியும் சென்றனர்.

அவர்கள் பேரணியின்போது, மோடி மோடி, வந்தே மாதரம் மற்றும் வந்தே அமெரிக்கா உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பியபடி சென்றனர். இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது அவர்களில் சிலர், ஹர் ஹர் மோடி என்ற பாடலுக்கு நடனம் ஆடியபடியும் சென்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருந்து பொருட்களை வழங்கி உதவியது, கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளுக்கு வழங்கியது உள்பட சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்தியாவின் நன்மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. இதுபற்றி இந்தியா மற்றும் தெற்கு ஆசிய வருங்காலத்திற்கான திட்ட தொடக்கத்திற்கான ஆராய்ச்சி இயக்குநர் அபர்ணா பாண்டேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை உன்னிப்பாக கவனிக்கும் சர்வதேச சக்திகளை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா உன்னிப்பாக கவனிக்கும். ஏனெனில், அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கும்போது, அது பொருளாதார முதலீடு மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை பெறுவது மட்டுமின்றி, தற்போது பயன்படுத்தி வரும் ஆளில்லா விமானங்கள் உள்பட பாதுகாப்பு சாதனங்களையும் பெறும். அவற்றை கடல்பகுதியில் பயன்படுத்த கூடும் என கூறியுள்ளார்.

இதேபோன்று ரஷியாவும், இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கும். ஏனெனில், இந்தியாவின் மிக பெரிய பாதுகாப்பு சாதன வினியோகிக்கும் பாரம்பரிய நாடாக ரஷியா உள்ளது. இதுதவிர, மூன்றாவது நாடு என பார்க்கும்போது, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அல்லது இலங்கை ஆகிய நாடுகளும் இந்தியாவின் நடவடிக்கைகளை கவனிக்க கூடும்.

ஏனெனில், அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கும்போது, அது அந்நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள உறவில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என அவர் கூறியுள்ளார்.


Next Story