உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி


உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா உதவும் - பிரதமர் மோடி
x

உக்ரைன் - இந்தியா இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.

கீவ்,

போலந்தில் இருந்து ரெயில் மூலம் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்த போரில் நாங்கள் (இந்தியா) நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவேதான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கம். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம், அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர்.

பேச்சுவார்த்தைகள், தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் இந்த தீர்வு கிடைக்கும். எனவே நேரத்தை வீணடிக்காமல் அதை நோக்கி நாம் நகர வேண்டும். எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை காண வேண்டும். உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

பிரதமர் மோடி மற்றும் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா-உக்ரைன் இடையேயான வர்த்தகம், பொருளாதார பிரச்சினைகள், பாதுகாப்பு, மருந்துகள், வேளாண்மை மற்றும் கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.

அந்தவகையில் வேளாண்மை மற்றும் உணவுத்துறையில் ஒத்துழைத்தல், மருத்துவ உற்பத்தி பொருட்கள் ஒழுங்கமைப்பு துறையில் ஒத்துழைத்தல், உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மானிய உதவியை இந்தியா வழங்குதல் மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,

உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா - உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் நான் இந்த மாபெரும் தேசத்திற்கு வந்தேன். அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசுக்கும், மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.


Next Story