சீனா போரை தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் - பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
எந்த ஒரு நாட்டின் மீதும் பிலிப்பைன்ஸ் போர் தொடுக்காது என்று பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்தார்.
மணிலா,
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென் சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிக்கு உரிமை கோருகின்றன. எனவே இங்கு அமைந்துள்ள தாமஸ் ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது.
அதன்படி சமீபத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட படகுகளை சீன கடற்படையினர் தாக்கி சேதப்படுத்தினர். இதில் ராணுவ வீரர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் சீன கடற்படையால் தாக்கப்பட்ட ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசுகையில், `எந்த ஒரு நாட்டின் மீதும் பிலிப்பைன்ஸ் போர் தொடுக்காது. அதேசமயம் தங்கள் மீது போரை தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்' என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.