துபாயில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிய மக்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்


நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 200 மீட்டரை கடக்க 45 நிமிடம் வரை ஆனது.

துபாய்,

துபாயில் கடந்த ஒரு வாரம் கனமழை பாதிப்பால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 200 மீட்டரை கடக்க 45 நிமிடம் வரை ஆனது.

அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி இருந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

குறிப்பாக மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர்.

துபாயில் நிலைமை தற்போது சீரடைந்து வருவதால் ஒருவாரமாக வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் நேற்று வாரத்தின் முதல் நாளன்று பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது போக்குவரத்துகளான பஸ், மெட்ரோ ரெயில் ஆகியவைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. துபாயின் முக்கிய வர்த்தக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியான பிசினஸ் பே-ல் நேற்று காலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட நேரம் முன்னேறி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஷேக் ஜாயித் சாலை அருகே அல் சபா சுங்க சாவடி அருகே உள்ள உட்புற சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் ஆமை வேகத்திலேயே ஊர்ந்து சென்றன. இதனால் சுமார் 200 மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடம் பிடித்ததாக வாகனங்களில் சென்றவர்கள் கூறினர். பிசினஸ் பே பகுதி மட்டுமல்லாமல் அல் பர்சா தெற்கு, அல் கைல், ஹெஸ்சா சாலை மற்றும் ஜே.வி.சி. ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்னும் சேவை தொடங்கவில்லை. மேலும் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் தாமதமாக வந்தது. இதன் காரணமாக வழக்கமாக செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.


Next Story