'ஜெருசலேம் நாள் கொண்டாட்டம்': இஸ்ரேலியர்கள் - பாலஸ்தீனர்கள் மோதல் ஏற்பட வாய்ப்பு - அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.
ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்து 1947-ம் ஆண்டு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இஸ்ரேல் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், நிலப்பரப்பு பிரிவை ஏற்க மறுத்த பாலஸ்தீன தரப்பு இஸ்ரேல் நாடு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேற்குகரை மற்றும் காசா முனை என இரு பகுதிகளாக இருந்த பாலஸ்தீனத்தை பாலஸ்தீன விடுதலை அமைப்பு நிர்வகித்து வந்தது.
அப்போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு மையமாக இருந்த ஜெருசலேமை சர்வதேச நகரமாக 1947-ல் ஐநா அறிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பின் ஜெருசலேமில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் எனவும் அங்கு வசிக்கும் நபர்கள் தாங்கள் இஸ்ரேலுடன் இணையவேண்டுமா? பாலஸ்தீனத்துடன் இணைய வேண்டுமா? என அறிவிக்கும் முடிவின் அடிப்படையில் ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணையலாம் அல்லது பாலஸ்தீனத்துடன் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பை பாலஸ்தீன விடுதலை அமைப்பு நிராகரித்தது. தொடர்ந்து 1948-ல் நடந்த போரில் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை ஜோர்டான் கைப்பற்றியது. ஜெருசலேமின் கிழக்குப்பகுதியில் பழைய நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் கிருஸ்தவ, இஸ்லாமிய, யூத புனித தளங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக பழைய நகரில், யூத புனித தளமான டெம்பிள் மவுண்ட் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தளமான அல் அக்சா மத வழிப்பாட்டு தளமும் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் இருந்தது.
இதனை தொடர்ந்து 1967-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது. இந்த போரின் போது ஜோர்டான் வசம் இருந்த கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் கைப்பற்றப்பட்டதை இதனை ஆண்டு தோறும் யூத காலண்டர் அடிப்படையில் மே 18-ம் தேதி 'ஜெருசலேம் தினம்' என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடி வருகிறது. மேற்கு மற்றும் கிழக்கு ஜெருசலேமை ஒருங்கிணைத்தை கொண்டாடும் வகையில் இஸ்ரேல் 'ஜெருசலேம் தினத்தை' கொண்டாடி வருகிறது.
இந்த தினத்தில் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள தெருக்கள் வழியாக யூத புனித தளம் அமைந்துள்ள டெம்பிள் மவுண்ட் பகுதிக்கு இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்துடன் பேரணியாக வருவது வழக்கம். அல் அக்சா மத வழிபாட்டு தலம் அமைந்துள்ள இடத்தில் இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவதால் இந்த பேரணியின்போது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 'ஜெருசலேம் நாள்' இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதி வழியாக பேரணியாக செல்ல உள்ளனர். அங்கிருந்து இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான அல் அக்சா வழிபாட்டு தலத்தின் சுற்றுச்சுவர் வளாகம் வழியாக பேரணி செல்ல உள்ளது. அங்குள்ள டெம்பிள்மவுண்ட் வழிபாட்டு தலத்திற்கு இஸ்ரேலியர்கள் செல்ல உள்ளனர்.
அப்போது, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் காசா முனையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதிகள் 5 பேர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் சண்டை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஜெருசலேம் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.