பாகிஸ்தானில் சிறைச்சாலை மீதான தாக்குதலை ராணுவம் முறியடித்தது- 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
துப்பாக்கிச்சண்டை நடைபெற்றபோது, பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவம் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மாக் நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத அமைப்பினர் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் வான்பாதுகாப்பு படையினர் இடைமறித்து தாக்கினர். பின்னர் அருகே உள்ள ராணுவ முகாம், ரெயில் நிலையங்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒருங்கிணைந்த இந்த மூன்று தாக்குதல்களையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதால், பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவம் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது. துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் அங்கு சில மணி நேரம் பதற்றம் நிலவியது.
பயங்கரவாதிகள் வீசிய ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கவில்லை. சிறையில் உள்ள குடியிருப்பு பகுதியின் சுவர்களை தாக்கியதாக சிறைத்துறை ஐ.ஜி. தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு அஸ்லாம் அச்சோ குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாதிகள், தடை செய்யப்பட்ட அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் மஜீத் படையுடன் தொடர்புடையவர்கள் என மாகாண தகவல் தொடர்பு துறை மந்திரி ஜன் அச்சாக்சாய் தெரிவித்தார்.
மாக் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் உள்ளிட்ட 800 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.