பாகிஸ்தானில் ராணுவ தளபதி குடும்பம் பற்றிய தகவல்களை திருடிய 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை
பாகிஸ்தானில் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தில் இருந்து ராணுவ தளபதி குடும்பத்தினரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இந்த சூழலில் பாகிஸ்தான் மக்களின் தரவுகளை சேமித்து தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்களை வழங்கி வரும் அந்நாட்டின் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தில் இருந்து ராணுவ தளபதி அசிம் முனீர் குடும்பத்தினரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தின் அதிகாரிகள் சிலர் இந்த சதியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இது குறித்து அந்த ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணையை தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் வரை நடைபெற்ற விசாரணையில் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தின் அதிகாரிகள் 6 பேர் ராணுவ தளபதி குடும்பத்தினரின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த அதிகாரிகள் பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த 6 அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து பாகிஸ்தான் நீதித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.