பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் சிக்கி 2 போலீசார் மரணம்; ஒருவர் காயம்


பாகிஸ்தான்:  குண்டுவெடிப்பில் சிக்கி 2 போலீசார் மரணம்; ஒருவர் காயம்
x

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கி மரணம் அடைந்த 2 போலீசாருக்கு உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குவெட்டா,

பாகிஸ்தானின் குவெட்டா நகரருகே குச்லாக் நகரில் திடீரென நேற்று வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் சிக்கி 2 போலீசார் உயிரிழந்தனர். இதுபற்றி குவெட்டா நகர துணை போலீஸ் சூப்பிரெண்டு அசார் ரஷீத் கூறும்போது, வெடிபொருட்கள் முன்பே திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன.

போலீசாரின் வாகனம் அந்த பகுதிக்கு வந்ததும் அதனை வெடிக்க செய்துள்ளனர் என ஊடகத்திடம் பேசும்போது கூறியுள்ளார். இந்த தாக்குதலில், உதவி காவல் ஆய்வாளர் ஜெய்னுதீன் மற்றும் மற்றொரு காவல் அதிகாரி முகமது தாஹிர் ஆகிய 2 பேர் மரணம் அடைந்தனர்.

வாகன ஓட்டுநர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு, முப்தி மெஹ்மூத் நினைவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் குவெட்டா நகரில் உள்ள சிகிச்சை மையத்தில் உயர் சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பலூசிஸ்தான் முதல்-மந்திரி சர்பராஸ் புக்தி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதேபோன்று, உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வியும், உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த ஜூலையில் இந்த எண்ணிக்கை 38 ஆகவும், கடந்த ஆகஸ்டில் 59 ஆகவும் இந்த எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.


Next Story