வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
x

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.

சியோல்,

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா இணைந்து கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இந்த கூட்டு ராணுவ பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நிறைவடைந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஜங்யாங் நகரில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி 10 நிமிட இடைவெளியில் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டது. முதல் ஏவுகணை கடலில் விழந்ததாகவும், இரண்டாவது ஏவுகணை வடகொரிய நிலப்பரப்பிற்குள்ளேயே விழுந்ததாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த 26ம் தேதி ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் 10 நாட்களுக்குள் 2வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய சம்பவம் கொரீய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story