புதிய திட எரிபொருள் ஏவுகணை சோதனை.. வட கொரியா அதிரடி


புதிய திட எரிபொருள் ஏவுகணை சோதனை.. வட கொரியா அதிரடி
x
தினத்தந்தி 3 April 2024 12:23 PM IST (Updated: 3 April 2024 3:29 PM IST)
t-max-icont-min-icon

சமீப ஆண்டுகளாக திட உந்துசக்திகளைக் கொண்டு இயங்கக்கூடிய அதிக ஆயுதங்களை வட கொரியா உருவாக்குகிறது.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தன்னுடைய வலிமையை வெளிப்படுத்தும் வகையிலும் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீப காலமாக அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான பதற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறது.

அவ்வகையில், புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இத்தகவலை வட கொரிய அரசு ஊடகம் இன்று தெரிவித்துள்ளது.

வட கொரியா அதன் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து கிழக்கு கடற்பகுதியை நோக்கி நேற்று ஏவுகணை ஏவுவதை தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர் கண்டறிந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் இன்று தகவல் வெளியாகியிருக்கிறது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் ஏவுகணை செலுத்தப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகம் கூறியிருக்கிறது. ஹவாசாங்-16 பி என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையானது, அணு ஆயுதப் போரை திறம்பட சமாளிக்கும் முக்கிய ஆயுதம் என கிம் விவரித்துள்ளார்.

அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை, திட-எரிபொருள் ஏவுகணை என பல்வேறு ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, சமீப ஆண்டுகளாக திட உந்துசக்திகளைக் கொண்டு இயங்கக்கூடிய அதிக ஆயுதங்களை உருவாக்குகிறது. அந்த ஆயுதங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், மறைத்து வைப்பதற்கும் எளிதானவை. திரவ உந்துசக்தி ஏவுகணைகளை விட விரைவாக ஏவக்கூடியவை. திரவ உந்து சக்தி ஏவுகணையை ஏவுவதற்கு முன்புதான் அதில் திரவ எரிபொருளை நிரப்பவேண்டும் நீண்ட காலத்திற்கு எரிபொருளை நிரப்பி வைக்க முடியாது என்பதால், திட எரிபொருள் ஏவுகணைகள் மீது வடகொரியா கவனம் செலுத்துகிறது.


Next Story