காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- போக்குவரத்து முடக்கம்
காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே போனதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன.இந்த நிலையில் இமயமலை பிராந்தியங்களில் அமைந்துள்ள உத்தரகாண்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்தும் முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
உத்தரகாண்டை பொறுத்தவரை, அங்கு புதைந்து வரும் ஜோஷிமத் நகரம், பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட மலைப்பிரதேசங்கள் அனைத்தும் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.தலைநகர் டேராடூன், முசோரி சுற்றுலாத்தலம் போன்ற இடங்களிலும் பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது. அதேபோல சமவெளி பிரதேசமான ஹரித்வார், உத்தம் சிங் நகர் மாவட்டங்களும் பனிமூட்டத்தால் முடங்கி இருக்கின்றன. இந்த பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஜோஷிமத் நகரில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.இதைப்போல காஷ்மீரிலும் நேற்று முதல் புதிதாக பனிப்பொழிவு தொடங்கி இருக்கிறது. சுற்றுலா நகரங்களான பகல்காம், குல்மார்க் மற்றும் அனந்த்நாக், குல்காம், சோபியான், புல்வாமா, பட்காம், குப்வாரா, ஸ்ரீநகர் என காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பனிப்பொழிவு காணப்படுகிறது.அதிகரித்து வரும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.இதைப்போல பனிப்பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரித்தாலும், ஸ்ரீநகர், காசிகுண்ட் உள்ளிட்ட பகுதிகளி பூஜ்ஜியத்துக்கு கீழே வெப்பநிலை சென்று விட்டது.காஷ்மீரில் பனிப்பொழிவுடன் லேசான மழையும் சில இடங்களில் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மேலும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடுமையான குளிரால் அவதிப்பட்டு வந்த டெல்லிவாசிகள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 10.6 டிகிரியாக இருந்தது. இது வழக்கத்தை விட சற்றே அதிகம் ஆகும்.இதைப்போல அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் வாட்டும் குளிரில் இருந்து சற்றே நிம்மதி அடைந்து வருகின்றனர்.