துருக்கியில் இந்தியர் யாரும் சிக்கி கொண்ட தகவல் இல்லை: தூதர் தகவல்


துருக்கியில் இந்தியர் யாரும் சிக்கி கொண்ட தகவல் இல்லை:  தூதர் தகவல்
x

துருக்கியில் இந்தியர் சிக்கி கொண்ட தகவல் எதுவும் இல்லை என அந்நாட்டிற்கான இந்திய தூதர் தெரிவித்து உள்ளார்.



அங்காரா,


துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், துருக்கிக்கான இந்திய தூதர் விரேந்தர் பால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, துருக்கியில் 3 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இல்லை. பலர் அந்த பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்.

தொடர்ந்து நாங்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம். துருக்கியில் இந்தியர் சிக்கி கொண்ட தகவல் எதுவும் இல்லை என அந்நாட்டிற்கான இந்திய தூதர் பால் தெரிவித்து உள்ளார்.

ஹதே மாகாணத்தில் இந்திய ராணுவம் சார்பில் மருத்துவமனை ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றை உருவாக்குவதற்காக தேவையான மருத்துவ குழுவை இரண்டு சி-17 ரக விமானங்கள் கொண்டு வந்து சேர்த்து உள்ளன என கூறியுள்ளார்.

எனினும், அந்நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையானவற்றை தொடர்ந்து நாம் செய்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story