நிரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
லண்டன்,
பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.12,500 கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு தப்பியோடினார் நிரவ் மோடி. 2018-ம் ஆண்டு நாட்டை விட்டு அவர் வெளியேறினார். அதன்பின்பே, அவருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் வெளியுலகிற்கு தெரிய வந்தன.
அதே ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் பலருக்கு எதிராக அமலாக்க துறை வழக்கு பதிந்தது. இதுபற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் இருந்து வைரம், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அமலாக்க துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கேற்ப, அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், லண்டனில் வைத்து 2019-ம் ஆண்டில் இங்கிலாந்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 16-ந்தேதி 5-வது முறையாக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. எனினும், இந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.